ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

ஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி

ஹென்றி ஷாரியரின் ‘பாப்பிலான்(தமிழில் ‘பட்டாம்பூச்சி’), அலெக்ஸ் ஹேலியின் ரூட்ஸ்(தமிழில் ஏழுதலைமுறைகள்) போன்ற நாவல்கள் (Bio - Fiction) தமிழில் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. கடந்த நூறு ஆண்டுகளில் காலனிய ஆதிக்கத்தின் பின்னான சமூகமாறுதல்கள், அதன் சாதக பாதக விளைவுகள், மாற்றத்தினூடாக வீழ்ச்சி அடையும் மதிப்பீடுகள், உறவுச்சிக்கல்கள் என்பவைதான் நம் புனைகதை உலகத்தின் உள்ளடக்கங்களாக இருந்துவந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் வரலாறுகளை புராணங்களை மறுவாசிப்பு செய்வது, சமகாலப் பார்வையில் புனைவுக்குள்ளாக்குவதான முயற்சிகள். இவற்றிலிருந்து விலகியவைகளாக புயலிலே ஒரு தோணி போன்ற விரல்விட்டு எண்ணத்தக்க விலகல்கள். காரணம் தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்களின் தன்மை அப்படி. தமிழின் ஆகச்சிறந்த புனைகதைகளாகப் பட்டியலிடப்படுகிற பெரும்பாலானவற்றை எழுதிய திருநெல்வேலி,  கும்பகோணம், மயிலாப்பூர் இலக்கியவாதிகள் பெற்ற வாழ்க்கை அனுபவங்கள் தானே எழுத்தில் கைகூடியிருக்கும் கடந்த 200 ஆண்டுகாலத்தில் புலம்பெயர்ந்தவர்கள், உலகப்போர்களுக்குப் போய்வந்தவர்கள், ரங்கூன் பர்மாவிலிருந்து நடந்தே ஊர்வந்து சேர்ந்தவர்கள் இப்படியானவர்கலெல்லாம் எழுத வரவில்லை. அல்லது எழுத வந்தவர்களுக்கெல்லாம் இத்தகைய அனுபவங்கள் வாய்க்கவில்லை என்றுதான் சமாதானப்பட்டுக் கொள்ளவேண்டும்.

அடிமை முறையும், உலகப்போர்களும், நாஜி வதை முகாம்களும் உலகுக்களித்த கொடை மனித இனம் உள்ளவரை உயிர்த்திருக்கும் இலக்கியங்கள்தாம். பிறந்த மண்ணை, வாழ்ந்த வீட்டை, உறவுகளை, சுயமரியாதையை எல்லாவற்றையும் இழந்து சாவின் விளிம்பைத்தொட்டு மீண்டவர்களின் எழுத்துக்கள், இலக்கிய நேர்த்திகள், உத்திகளையெல்லாம் புறம் தள்ளிவிட்டு நிமிர்ந்து நிற்கக் கூடியவை. இலங்கைச் சகோதரன் சயந்தனின் ஆறாவடுதமிழின் வேறுபட்ட நாவல் வகையை முன்னெடுக்க முயல்கிறது.

1987 முதல் 2003 வரையிலான காலப்பகுதியில் நடந்த இரண்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளின் காலத்தில் ஈழத்தமிழர்களிடையே துளிர்விட்டுத் தூர்ந்து போன நம்பிக்கைகள், நிகழ்வுகளினூடாகப் பயணிக்கும் கதை, இலங்கையிலிருந்து போலிக் கடவுச்சீட்டுகளோடு சுயஸ் கால்வாய்வழியாக அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றில் த சமடைய கடல்மார்க்கமாகச் செல்லும் கொடும் பயணத்தோடு முடிகிறது.தற்போது சுவிஸர்லாந்தில் வாழ்ந்துவரும் நாவலாசிரியரான சயந்தன் தன் இளமைப் பருவம் தொட்டு அருகாமையில் அவதானித்த நிகழ்வுகளே இந்நாவல். ஆனால் சம்பவங்களைத்தாண்டி விவரணையில் வெளிப்படும் இயல்பான பகடியும், சார்பற்ற நிலைப்பாடுகளும் அக்காலகட்டச் இலங்கைச் சூழல் பற்றிய சரியான சித்திரத்தை வரைகின்றன. இந்திய ராணுவம், இலங்கை அரசு பற்றிய அவரின் புரிதல்போலவே  புலிகளின் சாதனைகளையும் தவறான அணுகு முறைகளையும் தயக்கமின்றி பதிவுசெய்கிறார் என்பதைவிட கூடுதல் கசப்பை உமிழ்ந்துவிடாமல் இருப்பது முக்கியமாகிறது.

அருமையான வாசிப்பனுபவமாகவும், வரலாற்று ஆவனமாகவும் திகழும் ஆறாவடு 2011ல் வெளிவந்திருந்தும் ஏன் பேசப்படவில்லை என்ற ஆராய்ச்சிக்குள் நான் இறங்க விரும்பவில்லை. தமிழினி வெளியீடாக 2011 டிசம்பரில் வெளிவந்திருக்கும் இந்நாவல் தமிழின் மிக முக்கியமான நாவல் என்று சொல்லலாம். கிடைத்தற்கரிய அனுபவங்களும், அந்த அனுபவங்களை இலக்கியமாக உருமாற்றுகிற நுட்பங்களும் சயந்தனுக்குக் கூடி வந்திருக்கின்றன. சயந்தனிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்.புதன், 6 பிப்ரவரி, 2013

கடல்: நங்கூரமில்லாத நாட்டுப்படகு         
 பெப்பர் சிக்கன்என்று சர்வர் கூவியவுடன் போனவாரம் வேகவைத்த சிக்கனை ப்ரிட்ஜுக்குள்ளிருந்து எடுத்து, அதுவும் இதுவும் சேர்த்துச் சுடச்சுடப் பறிமாறும் தொழில்தெரிந்த மிலிட்டரி ஓட்டல் சமையல் மாஸ்டர் மாதிரி ஒரு அமெச்சூர் மாஸ்டராகிவிட்டார் நம் மணிரத்னம். இந்த மாதிரி சாப்பாடுகள் சலித்த நிலையில் தமிழன் கொ௺சம் வாய்க்குருசியாகச் சாப்பிட நினைப்பதைப் பற்றி மணி கவலைப்படுவதாய்த் தெரியவில்லை. அவருக்குத் தன் திறன்மீது (Craft) மீது இருக்கும் அளவுக்கதிகமான நம்பிக்கை பார்வையாளர்களை அசடர்களாய் எண்ணச் செய்துவிடுகிறது போலும்.

        ஒரு ஊரில் ஒரு மிக நல்லவரும் ஒரு மிகக் கெட்டவரும் இருக்கிறார்கள் என்று கதையை ஆரம்பிப்பது உங்களுக்கே நியாயமா மணி சார்? நம்ம அசோகன், நம்பியார் சாமி எல்லாம் போய் புல் முளைத்து காலம் பல ஆகிவிட்டது. முதலில் நல்லவன் கெட்டவன் என்ற இருமை எதிர்வாக மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாது/ கூடாது என்பதுதான் கடந்த இருபதாண்டுகளில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான மாற்றம். ஆனால் ஒரு பாதிரியாகப் பயின்றவர் ஏன் இத்தனை குரூரங்களைத் தனக்குள் பதியம் போட்டுவைத்திருந்தார். இன்றைய வாழ்க்கைச்சூழல் மனிதர்களைச் சுழற்றி அடிப்பதில் அவர்கள் மனதில் உறக்கிக் கொண்டிருக்கும் கடவுளும் மிருகமும் எப்போது விழிக்கும் என்பதை உணரமுடியாமல் இருப்பதையே இன்றைக்கு உலகம் முழுமையும் மிகச்சிறந்த திரைப்படங்கள் சித்தரிக்க முயற்சி செய்கின்றன. ‘CRASH’ என்றொரு அருமையான ஹாலிவுட் படம் நினைவுக்கு வருகிறது. ஏன் தமிழின் ஆகச்சிறந்த படமான ஆடுகளம். நெருக்கமான உறவுகளுக்குள் குரோதமும் பொறாமையும் புற்றிலிருந்து சர்ப்பமாய் வெளிக்கிளம்புவதை ஒரு பண்பட்ட திரைக்கதையாக உருமாற்றியிருந்த வெற்றிமாறனும் நம் நினைவுக்கு வருகிறார்.

மணிசார் உங்களுடைய பிரச்சனையே வெற்றிமாறன், அமீர், பாலா வகையறாக்கள் தான். அவர்கள் பயணப்படுகிற அடித்தள, விளிம்புநிலை மனிதர்களின் உலகத்திற்குள் சென்று வர ஆசைப்படுகிறீர்கள். ஆனால் அதற்கான எளிமையும், நேர்மையும் உங்களிடம் இருக்கிறதா? உங்களுடைய மேல்தட்டு நடுத்தரவர்க்க அழகியல் கண்ணாடியை அணிந்துகொண்டு ஒருபோதும் உங்களால் அடித்தட்டு மக்களின் வாழ்வியலுக்குள் பிரவேசிக்கமுடியாது. இந்தக் கதைக் களத்திற்குள் அரவிந்தசாமியும், அர்ஜுனும், வெய்யிலில் காயவைக்கப்பட்ட கௌதமும், போஷாக்கு அதிகமான உங்கள் நாயகியும் கல்யாண வீட்டுக்குள் எருமை புகுந்ததுபோல் நடமாடுவதாகத் தோன்றவில்லையா? அந்தக் கறுப்பு மனிதர்களுக்கு மத்தியில் உங்கள் வெளுத்த பாத்திரக்கள் அபத்தமாகத் தோன்றவில்லை? பருத்திவீரன், சுப்ரமண்யபுரம், காதல், ஆடுகளம் படங்களின் பாத்திரங்களை முன்னுதாரணங்களாய் தமிழர்கள் பார்த்தாகி விட்டதே.உங்கள் புரிதலில் மீனவர் வாழ்க்கை என்பது அழுக்கு, கூச்சல், அநாகரிகம், தூஷனம், குடி இவைதான். இதற்குள் உங்களுடைய சினிமா செட் போன்ற செயற்கையான பாத்திரங்கள் எப்படியாவது ஒரு  கதையைக் கண்டெடுத்து உங்களிடம் சேர்ப்பிக்கத் துடிக்கிறார்கள். பார்வையாளர்களும் கொடுத்த காசுக்கு என்னதான் கதை என்று படம் முழுக்கத் தேடுகிறார்கள். அது கடலும்  கடற்கரையாகவும் இருப்பதால் ஆளாளுக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு இதுதான் கதை என சமாதானப்பட்டுக் கொள்கிறார்கள். எல்லார் கைகளிலும் செத்தமீன்களும், சிப்பிகளும்தான். ஒருவர் கையிலும் முத்துக்கள் இல்லை.

இப்படத்தில் எல்லோருமே ஏன் அதீதமாய் நடந்துகொள்கிறார்கள். தேவைக்கதிகமான நல்லவரான அரவிந்தசாமி. அதே போல் உலகின் மொத்த கெட்டவைகளையும் உருட்டித்திரட்டி விழுங்கியதைப் போல அர்ஜுன். அந்த மொத்த கடல்புறத்திலும் கச்சடாபிடித்த, அழுக்கான, கத்திப்பேசுகின்ற, வசவுகளைப் பொழிகின்ற, புதியவர்களிடம் நாகரீகமில்லாமல் நடந்துகொள்கின்ற, ஆலயத்திற்குப் போகாத ஜனங்கள். உலகின் ஒட்டுமொத்தப் புறக்கணிப்பிற்குள்ளான நாயகன். கவர்ச்சியாகத் தெரியக்கூடிய ஆனால் அப்பாவித்தனத்தின் மொத்த உருவமான நாயகி. இவ்வளவு அதீதங்களும் ஏன் ஓரிடத்தில் ஒன்றிணைகிறார்கள்? வேறென்னத்துக்கு. எப்படியாவது படத்த ஓடவைக்கத்தான்.ஒரு மீனவக்குப்பத்தில் பாலியல் தொழிலாளி ஒருத்தி செத்துப்போய்விட, அவளை நன்கு தெரிந்த அவளுடன் உடல் தொடர்பு வைத்திருக்கக் கூடியவர்கள் எனக் கருத்த்தக்கவர்கள் அவளை ஒரு நாயைப்போல தூக்கிப்போய் மடங்காத காலை மண்வெட்டியால் வெட்டி, ஒடித்து அமுக்குகிறார்கள். இவற்றையெல்லாம் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைதான் உங்கள் நாயகன். எல்லாவிதமான புறக்கணிப்புக்கும் ஆளாகும் அவன் ஒரு பொறுக்கியாய் வளர்கிறான். சிறுவயதில் கொடூரமான அனுபவங்களால் மனமுதிர்ச்சியற்ற குழந்தை மனதோடு உலாவும் நாயகி.  அவர்களின் மன உலகத்துக்குள் பார்வையாளர்கள் நுழைய முயற்சிக்கும் போது, ஒரு கனவுப்பாடலால் பார்வையாளர் முகங்களில் காறி உமிழ்கிறீர்கள். அந்தப் பாத்திரங்கள் பற்றிய மனப்பிம்பங்களைச் சிதைத்து, மணற்பரப்பில் சேட்டுவீட்டுச் செல்லப்பிள்ளைகள் போல் இருவரும் கும்மாளமிடும் பாடல். இந்தக்கனவு நாயகன் நாயகி இருவருடைய பார்வையிலும் (point of view) இல்லை. இது உங்களின் வக்கிரமான பார்வையில் வருகிற பாட்டு..  பாடலின் மெட்டு, பாணி, நடனக்கலைஜர்கள், அவர்களின் உடை, நடன வடிவமைப்பு எல்லாம் நீங்கள் சொல்ல முயற்சிக்கும் கதையோடு என்னவிதமன உறவுகொள்கிறது? உங்கள் படைப்பு நேர்மைக்கு இது ஒரு சோறு.

சரி சார். கதை எந்தக்காலத்தில் நடக்கிறது. குறைந்தது 200 வருடங்களாக கத்தோலிக்கத் திருச்சபைகள் இருக்கின்றன. கத்தோலிக்கம் மிகவும் நிறுவனமயமான சமயம். அப்படி ஒரு அழகான ஆலயத்தை ஏன் பாழடைய விட்டார்கள்? பின் திடீரென ஆலயத்தைக் கூட்டிப்பெருக்க பாதர் ஏன் வந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலை என்ன? எல்லோர் கழுத்திலும் சிலுவையைத் தொங்கவிட்டிருக்கும் அவ்வூர் மக்கள் ஏன் கோயில்பக்கம் போகமாட்டார்கள்?கடந்த சில ஆண்டுகளில்மீனவர்கள்என்ற வார்த்தை தமிழகத்தில்  இரண்டு விசயங்களை நினைவுபடுத்தும். ஒன்று இலங்கை ராணுவத்தால் உயிரிழக்கும், விரட்டப்படும் ராமேஸ்வரம் மீனவர்கள். இரண்டாவது கூடங்குளம் மீனவர்கள். இந்த நூற்றாண்டின் மகத்தானஅணு உலைக்கு எதிரான போராட்டத்தைமிகவும் கட்டுப்பாட்டோடு நடத்திக் கொண்டிருப்பவர்கள் கூடங்குளம் மீனவக் கிராமங்களைச் சார்ந்தவர்கள். அவர்களின் அரசியல் செயல்பாட்டிற்குப் பின்னால் கத்தோலிக்கத் திருச்சபை இருப்பதும் வெளிப்படை. எட்டத்தில் இருக்கும் காஷ்மீர் பிரச்சனையையும், மும்பைக் கலவரத்தையும் பேசமுற்பட்ட உங்களால் ஏன் நீங்கள் வாழும் மாநிலத்தில் இருக்கும் ஒரு அசாதாரணப் பிரச்சனையைப் பேச முடியாமல் போகிறது? காவல்துறையே வன்முறையை வழிமொழிந்து அதன்மூலம் பிரச்சனையைத் திசை திருப்ப முயன்றபோதும், மிகுந்த கட்டுப்பாட்டுடன் தங்கள் போராட்டத்தைத் தொடரும் மீனவ சமுதாயம் ஏன் மணிசாரை ஈர்க்கவில்லை. மாறாக புனைவில் மீனவர்களை ஒரு காட்டுக் கும்பலாகச் சித்தரிக்க விரும்புகிறார். மணி சித்தரிக்கும் விதமாக இருந்த ஒரு மீனவசமுதாயம், நகர்ப்புற படித்த வர்க்கத்தினரால் கற்பனை செய்து பார்க்கமுடியாத ஜனநாயகவழியிலான போராட்டங்களை மாதக்கணக்காய் நடத்திக் கொண்டிருக்கும்போது ஏன் இப்படியொரு சித்தரிப்பு? நிலமைகள் இப்படியெல்லாம் இருக்கும்போது ஏன் மணிசாருக்குஇப்படியொருமீனவக் குப்பத்தைப் படைக்கத்தோன்றியது? ‘ஒரு படைப்பாளி அவனறியாமலேயே தன் வியாதியையும் தன் படைப்பில் ஊற்றுகிறான்என்று லூயி பாஸ்டரோ யாரோ சொன்னது இதைத்தான் போலும்.

        இந்தப்படைப்பில் ஜெயமோகனின் பங்கு என்னவாக இருந்திருக்கும்? என்று யோசிக்காமலிருக்க இயலவில்லை. இவ்வளவு அபத்தமாக ஜெயமோகன் எந்தப் புனைகதையையும் எழுதியதில்லை என்பதால் பழியை அவர்மேல் மொத்தமாய் சுமத்தக்கூடாது என்றே சொல்வேன். சினிமாவில் இயக்குநர் கரையிலிருந்து மீன்பிடிக்க விரும்பினால் எழுத்தாளர் பக்கத்தில் உட்கார்ந்து தூண்டிலுக்குப் புழு எடுத்துக் கொடுக்கலாம். இயக்குநர் குட்டையில் இறங்கினால் எழுத்தாளரும் உள்ளே இறங்கி தன் முகத்திலும் சேற்றைப்பூசிக்கொண்டு நிற்கவேண்டியதுதான். ஜெயமோகன் பூசிக்கொண்ட்து அப்படித்தான்.  மேலும் சமீபத்தில் மிகச்சிறந்த படைப்பான அறம் எனும் கதைத்தொகுப்பை எழுதியவரும் அவர்தான். ஒருவகையில் இத்தொகுப்பின் நீட்சிதான் இந்தக் கதையின் மையம். ஆனால் மணிரத்னத்தின் தேவை பெரியது. அதை ஒரு இலக்கியவாதி இட்டுநிரப்பிவிடவும் முடியாது. ரோஜா திரைப்படத்தின் மூலம் அவர் உருவாக்கியிருக்கும்இந்தியத் திரைப்படம்என்ற பார்முலா அவருக்கு வேறுமாதிரியான நிர்பந்தங்களை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதையும் தன் சந்தையாக மாற்ற நினைக்கும் மணி ரத்னத்தால் எப்படி திட்டவட்டமாக கதை நடக்கும் இடத்தையும் காலத்தையும் பிரச்சனைகளையும் கதையாக்க முடியும்? இராவணனிலும் இதே பிரச்சனைதான். அவருக்குப் சமூகப் பிரச்சனைஎன்பது ஊறுகாய்தான். மையம் கேளிக்கைதான்.        அடுத்து இந்தப்படத்தில் மணியால் ஏமாற்றப்பட்டவர்களில் பிரதானமானவர் .ஆர்.ரஹ்மான். வழக்கமான அவருடைய பாணி காட்சியமைப்புகள் பாடல்களைச் சிறுமைப்படுத்துகின்றன.  

இவ்வளவு மெனக்கெட்டு எழுதிக் களைப்பதற்கான காரணம் உணர்வுபூர்வமான காட்சிகளை நேர்த்தியாகக் கையாளக் கூடிய சொற்ப இயக்குநர்களில் ஒருவர் நீங்கள். குறிப்பாகக் காதலை அழகாகச் சொன்னவர்களில் நீங்கள் ஒருவர். அலைபாயுதே போன்ற கதைக்களங்களைக் கையாள்வதில் உங்கள் பாணி தனிதான். ஆனால் திறமையாலும் தொழில்நுட்பத்தாலும் எல்லாவற்றையும் கையாண்டுவிடலாம் என்கிற தன்னம்பிக்கைதான் உங்கள் தொடர் தோல்விகள்.
   
ஆற்றைப் பல வழிகளில்  கடக்கலாம். நீங்கள் படகில் கடக்கலாம் என்கிறீர்கள். ஆனால் நீந்திக் கடப்பதுதான் உண்மையான அனுபவம். அடித்தள மக்களின் வாழ்வியலை, அழகியலைப் புரிந்துகொள்வதும் அப்படிப்பட்டதுதான்.

என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.