வெள்ளி, 3 மே, 2013

உதயம்: தேசிய நெடுஞ்சாலையில் நிர்கதியாய் நிற்கும் தமிழ்க்காதல்







இலைகளை உதிர்க்கும் கோடைக் காலத்து மரங்களைப் போல தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தொடர்ந்து நம் நம்பிக்கைகளை உதிர்த்து வருவதை என்னவென்பது? பாலாவின் ‘பரதேசி’ ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், தமிழின் முக்கிய இயக்குநரான வெற்றிமாறனின் திரைக்கதை, வசனம், தயாரிப்பில் வெளிவந்திருக்கும் உதயம் அடுத்த அயற்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் ஒரு காதல் படம். ஒரு சராசரி கல்லூரி மாணவர். காதலிக்குத் துன்பம் நேர்ப்படும் போதெல்லாம் அசகாய சூரராக மாறிவிடுபவர். அதுதானே காதலின் மகத்துவம். மேலும் காதலிப்பவனெல்லாம் காதலனாகிவிட முடியாது. வில்லன்கள் வரும்போது அவர்களை அடித்து நொறுக்குபவனே உண்மையான அக்மார்க் காதலன் – என்பது போன்ற தமிழ் சினிமாவின் காதல் பற்றிய அரை நூற்றாண்டுக் கற்பிதங்களுக்குப் பொழிப்புரை எழுதும் படங்களை இன்னும் எவ்வளவு காலத்திற்குச் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரியவில்லை.

தமிழில் ஏன் பெரும்பாலான படங்கள் காதலைப் பற்றியனவாகவே இருக்கின்றன? என்பது அடிக்கடி எழுப்பப் படும் கேள்வி. காதல் படங்களாக எடுத்துத் தள்ளுவதில் தவறொன்றும் இல்லைதான். ஆனால் என்ன வகையான காதல்? எதைக் காதலாக முன்மொழிய முயற்சிக்கிறோம் என்பது திரைப்பட உள்ளடக்கம் பற்றிய பிரச்சனை மட்டுமன்று. ஒரு சமூகத்தின் பொது உளவியலின் பிரச்சனை. காதல் என்ற உணர்வை, உறவை இவ்வளவுக்குக் கொச்சைப் படுத்தும் சமூகம் உலகில் எங்கும் இருக்குமென்று தோன்றவில்லை. காதலின் கவித்துவமான வலியை, வலிநிறைந்த பரவசத்தைப் பேசிய படங்களை தமிழ் சினிமாவில் பார்ப்பது அரிதினும் அரிதாகி வருகிறது. 80களுக்குப் பின் படங்கள் பார்க்க ஆரம்பித்தவன் என்ற வகையில் சலங்கை ஒலி, அழகன், அழகி, அலைபாயுதே, பூ, விண்ணைத் தாண்டி வருவாயா? இப்படிச் விரல்விட்டு எண்ணத்தக்க படங்களே என் நினைவுகளில் ‘காதலின்’ ஆன்மாவைப் தொட்டுச் சென்ற படங்களாகத் தட்டுப்படுகின்றன.

காதலைப் பற்றிப் பேசமுற்படும் படங்களில் இவ்வளவு வன்முறைக்கும் ஆரவாரத்திற்கும் என்ன அவசியமிருக்கிறது என்ற கேள்வி பல நேரங்களில் எழுவதுண்டு. பெரும்பாலும் இங்கே காதல் பற்றியதாகச் சொல்லப்படும் படங்கலெல்லாம், நம் சமூகம் காதலைக் கையாளும் விதத்தைப் பற்றியனவாகவே இருக்கின்றன. அதாவது காதலை உள்முகமாகப் பேசுவதற்குத் திராணியற்றவையாக இருக்கின்றன. அதனாலதான் காதல் என்றவுடன் டாடா சுமோக்கள், ரவுடிகள், துரத்தல்கள், நண்பர்கள் என்பதாக முடிந்துவிடுகிறது. ‘உன்னப் பாக்கலன்னா செத்துருவேன் போல இருக்குடா’ என்று காதலி சொன்னவுடன் அர்த்த ராத்திரியில் அரண்மனையையொத்த பங்களாவின் கெடுபிடிகளைத் தகர்த்து அவள் படுக்கையறையில் சாவதானமாகச் சந்திக்கச் செல்கிறான் உதயம் நாயகன். நண்பர்களாகப்பட்டவர்கள் மதில் சுவரருகே காவல் காக்கிறார்கள். அப்புறம் காவலர்களிடம் மிதி படுகிறார்கள். காதலென்றால் தியாகமில்லாமலா? நண்பர்கள் சொல்கிறார்கள், ‘தூக்கிருவோம் மாப்ள..’, நாயகனின் அக்கா சொல்கிறாள்.. ‘தம்பி உனக்குப் புடிச்சிருகிலடா.. அப்ப தூக்குடா.. வற்றத பாத்துக்கலாம்..’ இவர்கள் தூக்கிறலாம் என்று சொல்வது பொமரேனியன் நாய்க்குட்டியை அல்ல. ஆண்களுக்குச் சம்மாய் படிக்கிற, பப்புக்குப் போகிற, புகைக்கிற, குடிக்கிற அதி நவீன யுவதியை. ஆனாலும் அவள் சொல்கிறாள் ‘நான் உன் கூட இருக்கிறப்பதான் பாதுகாப்பா உணர்றேன்..’.


 

இந்த உலகமயச் சூழலுக்குப் பிந்தைய பெருநகரப் பண்பாட்டில் இன்னும் ஆண்களின் அரவணைப்பையும், அவர்கள் மட்டுமே கொடுக்க முடிவதான பாதுகாப்பையும் நம்பித்தான் நம் பெண்கள் இருக்கிறார்களா? ரவுடிகள், சமூக விரோதிகள், அரசியல் புள்ளிகளின் அடாவடிகளுக்கு எதிராக நம் இளைர்கள் தோள்களை உயர்த்தும் திராணி உடையவர்களாகத்தான் இருக்கிறார்களா? இன்றைய சமகாலச் சூழலை வெற்றிமாறன் உட்பட நம் திரைக்கதையாசிரியர்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள். 

 

சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்த ப்ரணயம் எனும் மளையாளப் படம் கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த காதலைப் பற்றிய ஆகச் சிறந்த படங்களில் ஒன்று என்பேன். 2011ல் வெளியான ப்ரணயம் காதலின் உன்னதத்தை வலியுடன் பேசுகிறது. உணர்வுகளைப் பிசையும் காட்சிகளாலும் உரையாடல்களாலும் கதையமைப்பாலும் அற்புதமான சினிமாவாக உருப் பெற்றிருக்கிறது. கிறித்தவப் பெண்ணான கிரேஸும் (ஜெயப்ரதா) இந்துவான அச்சுத மேனனும் (அனுபம்கர்) காதலித்து குடும்பத்தாரை எதிர்த்து திருமணம் செய்துகொள்கிறார்கள். ஒரு ஆண்குழந்தைக்குப் பிறகு இருவரும் பிரிகிறார்கள். 

 

நாற்பது ஆண்டுகள் கழிந்து கொச்சியின் உயர்நடுத்தரவர்க்க அபார்ட்மண்டின் லிப்ட்டுக்குள் அச்சுதமேன்னும் கிரேஸும் சந்தித்துக் கொள்கிறார்கள். அச்சுதமேன்ன் ஹார்ட் அட்டாக்கில் மயங்கிவிழ கிரேஸ் மருத்துவ மனைக்குக்கு அவரைக் கொண்டு சேர்க்கிறாள். துபாயில் மகன் பணிபுரிய மருமகளோடும் பதின்வயதுப் பேத்தியோடும் வசிப்பவர் அச்சுதமேனன். கிரேஸ் மாத்யூ(மோகன்லால்) என்ற கிறித்தவ பேராசிரியரை மறுமணம் செய்திருக்கிறாள். தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தள்ளுநாற்காலியில் காலம்தள்ளும் மேத்யூவுடனும் மகள் மருமகனுடனும் வசிப்பவள் கிரேஸ். எதிர்பாராத சந்திப்புக்குப் பின் கிரேஸும் அச்சுதமேன்னும் தொடர்ந்து சந்தித்துக் கொள்வது குடியிருப்புவாசிகளாலும் கிரேஸின் மகளாலும் கொச்சைப்படுத்தப் படுகிறது. தாயில்லாமல் வளர்ந்த அச்சுதமேன்னின் மகனும் தன் தாயான கிரேஸை வெறுக்கிறான். தந்தையை சொந்த ஊருக்கு இடம் மாற்றத் துணிகிறான்.

 

இதற்கிடையில் அச்சுதமேனன் கிரேஸின் கணவனான மாத்யூவைச் சந்திக்கிறார். மூவருக்குமான பகிர்தல்கள் ஆரோக்கியமான நட்புச்சூழலை உருவாக்குகிறது. மூவரும் யாருக்கும் சொல்லாமல் பயணம் புறப்பட்டுச் செல்கிறார்கள். சக்கர நாற்காலியில் நிமிடங்களைத் துரத்திக் கொண்டிருந்த மாத்யூ மிக மகிழ்ச்சியாக உணர்கிறார். இருவரும் நீண்ட நாட்களுக்குப் பின் மது அருந்துகிறார்கள். மூவரும் கடற்கரைகளில் விளையாடிச் சிரிக்கிறார்கள். திடீரென மாத்யூவை இரண்டாவது முறையாக பக்கவாதம் தாக்குகிறது. மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக மாத்யூவுக்கு நினைவு திரும்புகிறது. ஓய்வெடுப்பதற்காக அறைக்கு கிரேஸும் அச்சுதமேன்னும் வருகிறார்கள். அப்போது துபாய்க்கு கிளம்பிக் கொண்டிருக்கும் மகன் அவளோடு பேச விரும்புவதாகக் கூறி போனைக் கையில் கொடுக்கிறார் அச்சுதமேன்ன். தயக்கத்துடன் வாங்கும் கிரேஸிடம் மகன் பிரியத்துடன் பேசுகிறான். அம்மாவை நேரில் சந்திக்க வேண்டும்போல் இருக்கிறது என்கிறான். வாழ்நாளில் அம்மா அப்பாவுடன் ஒரு நாளாவது இருக்கவேண்டும் என்கிறான். அப்பா எனக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஆனால் அம்மா,  அவர் உனக்காகத்தான் காத்துக்  கொண்டிருந்திருக்கிறார் என்பதை நான் உணரவில்லை என்கிறான். என் மனதிலிருந்த பாரமெல்லாம் குறைந்துவிட்டது எனும் கிரேசிடம், ஒரு நாளாவது நாம் நம் மகனுடன் இருக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசையுமாகும் என்கிறார் அச்சுதன். வெளியே மழை பொழியத் தொடங்குகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் முதல் முறை இருவரும் சந்தித்துக் கொண்டபோது பெய்த மழை நினைவுகளில் வழிகிறது. அனிச்சையாக அச்சுதமேன்ன் கிரேஸின் கன்னங்களைத் தாங்கி நெற்றியில் முத்தமிடுகிறார். கிரேஸ் அவரைத் தழுவிக் கொள்கிறாள். ஆனால் சில நிமிடங்களில் மயங்கிச் சரிந்து உயிர்விடுகிறாள். கிரேஸின் கல்லறையில் மலர்கொத்து வைத்துவிட்டு மாத்யூவைச் சக்கரநாற்காலியில் தள்ளிக்கொண்டு அச்சுதமேனன் திரையைவிட்டுச் செல்லும்போது ‘love goes on..’ என்ற வரிகளை வாசிப்பதற்கு தேவையேதும் இருப்பதில்லை.

 

அற்புதமான நடிப்பாலும் நயமான உரையாடல்களாலும் இப்படம் திரைக்கலையின் உன்னதங்களைத் தொடுகிறது. அதிக பட்சமும் வரும் அண்மைக்காட்சிகளில் மொகன்லால், அனுபம்கர், ஜெயப்பிரதா மூவரின் உணர்ச்சி கொப்பளிக்கும் குறிப்பாக அனுபம்கரின் நுணுக்கமான முகபாவங்கள் நடிப்பின் சிகரங்களாக அமைகின்றன. எல்லாவற்றையும்விட சமகால வாழ்க்கை உருவாக்கும் அதீதச் சூழல் இருமனங்களைக் கடந்தும் நீளும் காதலின் நீர்மத்தன்மையை இயக்குநர் கையாளும்விதம் மிக முக்கியமானது. பிரிவுக்குப் பின்னும் புத்தகத்திற்குள் ஒளித்து வைத்த மயிலிறகாய் அச்சுதன் தன்காதலை பத்திரப்படுத்தியிருக்கும் விதம், நாற்பது ஆண்டுகளுக்குப்பின் அதே காதலுடன் தன்னை எதிர்கொள்ளும் முன்னாள் காதலன் ஒரு புறம், சக்கரநாற்காலியில் தன்னையே நம்பி உயிர்வாழும் காதல் கணவன் இன்னொருபுறமாகத் தத்தளிக்கும் கிரேசி. தன் மேலுள்ள மனைவியின் அப்பழுக்கற்ற காதலையும், தன் மனைவியின் காதலுக்காக வாழ்நாள் முழுவதும் காத்திருந்த ஒருவனையும் ஆரோக்கியமாகப் புரிந்துகொள்ள முற்படும் மாத்யூ.. சமகால வாழ்க்கையின் விசித்திரமான நிர்பந்தங்களினூடாக வாழ்க்கையைப்  புரிந்துகொள்ள உதவிசெய்வதுதானே கலையின் வேலையாக இருக்கமுடியும்?

உதயம் படத்தின் உச்சகட்டக் காட்சியில், நாயகியை நாயகனிடமிருந்து பிரித்து வில்லன் ஜீப்பில் கூட்டிச் செல்கிறான். பாத்தியா உன்ன அவனால காப்பாத்த முடிஞ்சதா? என்று வில்லன் கேட்க, நாயகி சொல்கிறாள், அவன் வருவான்.. என்று சொல்லி முடித்ததும் நூறுமைல் வேகத்தில் வரும் ஜீப்பை நிறுத்துவதற்கு நடுரோட்டில் நாயகன்  நிற்பது தெரிகிறது. அதற்கப்புறம் என்ன ஆகியிருக்கும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லைதான். ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் நிற்பதுதான் தமிழர்களின் காதல் என்பதாகவும் அதை அன்றாடம் ஏற்றி நசுக்கிக் கொல்லும் ஜீப் ஓட்டுநர்கள்தான் நம் தமிழ்சினிமா இயக்குநர்கள் என்பதாகவுமே புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது.


என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.