செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

எம்.எஸ்.வி. எனும் தன்னிகரில்லாக் கலைஞனுக்குத் தமிழ்ச்சமூகம் செய்யப்போவதென்ன?


எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவை முன்னிட்டு உதிர்க்கப்பட்ட ஆழமற்ற, மிகைப்படுத்தப்பட்ட புகழுரைகள் ஆற்றில் உதிர்ந்து மிதந்தோடும் பழுத்த இலைகளைப் போல் நதியின் ஓட்டத்தில் காணாமல் போய்விட்டபின்னும் நதி ஓடிக்கொண்டுதானிருக்கிறது எண்ணற்ற அதிசயங்களோடு… எம்.எஸ்.வி.யின் இனிய கானங்களைப் போல…

60களில் பிறந்து 80களில் கல்லூரியில் வாசித்துக்கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் இளையராஜாவின் ரசிகர்களாகவும், பக்தர்களாகவும், வெறியர்களாகவும் இருந்தோம் என்பதைச் சொல்லத்தேவையில்லை. ஒரு துறையில் ஒருவரைப் பிடித்தால் இன்னொருவரை வெறுத்தாக வேண்டும் என்ற தமிழ்கூறும் நல்லுலக மரபுப்படி நாங்கள் எம்.எஸ்.வி.யை பொருட்படுத்தாதவர்களாய் இருந்தோம். எம்.எஸ்.வி.க்கும் அப்போது சகவாசம் சரியில்லாத காலகட்டம். பழம் தின்று கொட்டை போட்ட இயக்குநர்கள். 50 அகவைகளைத் தாண்டிய நாயகர்கள். அவர்களுக்காக ஒரு டூயட் கம்போஸ் பண்ணவேண்டும் எனும்போது பாவம் எத்தகைய கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார் மெல்லிசை மன்னர். யாருக்குத் தெரியும்? இளையராஜாவை ஏற்றுக்கொள்ள முடியாத மூத்த தலைமுறை நண்பர்களோடு இசை பற்றிய பேச்சுவரும்போது எம்.எஸ்.வி.யையும் டி.எம்.எஸ்.சின் அப்போதைய பாடல்களையும் கிண்டலடித்து மகிழ்வது வழக்கமாக இருந்தது.


 அப்போதைய எங்கள் வாழ்க்கையே கொஞ்சம் இலக்கிய வாசிப்பும் மற்ற பொழுதெல்லாம் இசையைப் பற்றிய (இசை என்ன இசை … தமிழ் சினிமா பாடல்கள்தான்..)பேச்சாகவே கழியும். ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில் அப்படிப்பட்ட வழக்கமான அரட்டை எதுவுமில்லாமல் நண்பர்களின் முகங்கள் இருண்டு கிடந்தன. ஈயாடவில்லை என்பார்களே… அதுதான். விசயம் என்னவென்றால் அபோதுதான் எம்.எஸ்.வியின் ‘நினைத்தாலே இனிக்கும்’ படப்பாடல்களை முதல் முறையாக  கேட்டுமுடித்திருந்தோம். எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று புரியாததால் விளைந்த நிசப்தம் அது. அமைதியை கலைத்துக் கொண்டு ஒரு நண்பர் சொன்னார்… ஏ..மாப்ள.. இந்தி ட்யூன்கள…புடிச்சிருப்பாரோ?...கொஞ்சம் சுதாரித்துக்கொண்ட இன்னொரு நண்பர் சொன்னார்… ட்யூனு பரவாயில்ல(பரவாயில்லையாம்?) … பி.ஜி.எம்… ஒன்னும் பெருசா இல்லை…. இது திக்குத்தெரியாமல் இருந்த எங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இன்னொருவர் எடுத்துக்கொடுத்தார்… லீட் கிட்டார ஓவரா இழுத்துருக்கார்….இப்படிப் பேச்சு சுரத்தில்லாமல் போய்கொண்டிருந்தது…. ஆனால் உள்ளூர பாடல்கள் படு ஹிட்டாகப் போகிறதென்பதும் இளையராஜா என்னசெய்து இதைச் சமாளிக்கப் போகிறார் என்பதும் எங்களை பெருங்கவலையாகச் சூழ்ந்துகொண்டன.


காலங்கள் உருண்டோ உருளாமலோ ஓடி ஒரு 15 ஆண்டுகள் கடந்தபின் ஒருநாள் ஒரு ஒலிநாடாக் கடையில் நான் பதிவதற்குக் கொடுத்திருந்த ஒலிநாடாவை வாங்கப் போயிருந்தேன். ஒரு பாடல் ஓடிக்கொண்டிருந்தது. என்ன பாட்டு? என்று கேட்காமலே கடைக்காரர் சொன்னார். ரோஜான்னு மணிரத்னம் படம். புது மியூசிக் டைரக்டராம்.ஏ.ஆர்.ரஹ்மானாம்... நல்லா போட்டுருக்காப்புல…’என்னங்க… சன்டே ஸ்கூல்… ரைம்ஸ்மாதிரி இருக்கு…’ என்று ஒரு விமர்சனத்தை உதிர்த்துவிட்டு இடத்தைக் காலி செய்தேன். நாங்கல்லாம் மூனு தலைமுறையா காங்கிரஸ்காரங்க…ங்கிறமாதிரி இளையராஜாவுக்குப் பக்கத்துல இன்னொரு நாற்காலிய போடவிட்ருவமா? ரகுமானாம்… ரகுமான்…! ஆனால் ‘சின்னச் சின்ன ஆசை சிறகடித்து தமிழ்நாட்டையும் தாண்டிப் பறந்தததை வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்ததை வெளியில் சொல்லாமல் அன்றைக்கு எம்.எஸ்.விக்கு சொன்னதையே வேறுவார்த்தைகளில் சொல்லிக்கொண்டிருந்தேன். சிம்பிளான ட்யூன்… வெஸ்ட்டர்ன் பீட்ஸ போட்டு ஒப்பேத்திருக்கார்.… ரெம்ப நாள் தாங்கமாட்டாப்புல…’

சராசரி வெகுசன ரசிகனின் நிலையிலிருந்து விலகி இசையை இசையாகப் புரிந்துகொண்டு ரசிக்கத் துவங்க இன்னும் சில ஆண்டுகள் தேவைப்பட்டது. மதுரையில் கங்கை அமரன் இசை நிகழ்ச்சியொன்றில்.. ‘இந்த மன்றத்தில் ஓடிவரும்..’ எனும் பாடலைக்கேட்டபோது, அதற்குமுன் எத்தனையோமுறை கேட்டிருந்தும் மிகப்புதிதாக அது என்னை தொட்டது போலிருந்தது. அன்றிலிருந்து அந்த மெட்டு என் மனதில் நீங்கா இடம் பிடித்தது. பின்னோக்கித் தேடத்தொடங்கியபோதுதான் பொறுக்காமல் கிடக்கும் முத்துக்கள் போல் எம்.எஸ்.வியின் எத்தனையோ மெட்டுக்களை நானும் என்னுடைய தலைமுறையும்  கவனிக்காமல் விட்டிருப்பதை உணர்ந்துகொண்டேன்.
ஆக திரையிசை என்பது சராசரி ரசிகனைப் பொறுத்த அளவில் சுய சார்புகளும் விருப்பு வெறுப்புகளும் அவர்களின் பதின்பருவ கனவுகளும் சேர்ந்தது. ஆனால் ஒரு பாடல் உடனடி வெற்றி பெறுவதென்பது அந்தப்பாடல் எந்த நாயகனோடு தொடர்புடையது என்பதையும் பொறுத்தது. அதனால்தான் ரஜினிகாந்துக்கு இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் பாடல்களும் வெற்றிப் பாடல்களாகியிருக்கின்றன. எம்.எஸ்.வி., சங்கர்-கணேஷ், ராஜா, சந்திரபோஸ், தேவா, ரஹ்மான், வித்யாசாகர்…இப்படி.. ஆகவே ஒரு பாடலின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். ஆனால் அந்தப்பாடல் காலம் கடந்து நிற்கத் தகுதி படைத்ததா என்பதையறிய கொஞ்சம் கூடுதலாகக்  காத்திருக்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஒரு வழித்தட ஒலிப்பதிவு முறையில் பதிவு செய்யப்பட்டு கிராமபோன்களில் ஊசிகளின் வருடல்களில் இசையைக் கேட்ட காலத்தைச் சார்ந்த கலைஞர் எம்.எஸ்.வி. அவர்காலத்து இசை உருவாக்கமுறை இப்போது பழங்கதையாய் போய் வெகுகாலம் ஆகிறது. அவருக்குப் பின் இரண்டு பெரும் இசை ஆளுமைகள் தமிழ்சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா இசையிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் இன்றும் எம்.எஸ்.வியின் உயிரோட்டமான மெட்டுக்கள் ‘எம்.ஜி.ஆர். பாட்டு, சிவாஜி பாட்டு’ என்ற முன்னொட்டுகள் இல்லாமலே அதன் தனித்துவத்தால் மட்டுமே நீர்த்துப்போகாமல் இருக்கின்றன.

பொதுவாக திரைப்பட இசையை வெகுசன இசை(Popular Music) என்ற வகைப்பாட்டிற்குள் அடக்கினால் ‘வெகுசன இசை என்பது ஒரு செய்தித்தாளைப் போன்று தற்காலிகத் தன்மையுடையது’ என்றுதான் நம்பப் பட்டது. ஆனால் உலகமுழுவதும் வெகுசன இசை (Pop Music) தற்காலிக வெற்றிகளைத்தாண்டி குறைந்தது அரை நூற்றாண்டுகளைக் கடந்தும் அதன் வேறுவடிவங்களோடு புழக்கத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. பல்வேறுவகையான இசை வகைகள் புழங்கும் சூழலும் சிறுவயதிலேயே இசை பற்றிய பரிச்சயமும் உலக நாடுகள் பலவற்றில் இருப்பதுபோல் இந்தியச் சூழல் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளும்போது திரைப்பட இசையே பெரும்பாண்மை மக்களின் இசை வடிகாலாக இருக்கிறது. ஆனாலும் திரைப்பட இசை வாழ்வாங்கு வாழும் என்று நினைப்பது ஒரு எளிமையான அனுமானமே. இன்னும் நூறு ஆண்டுகளைத் தொட்டுவிடாத ஒரு கலைக்கு அப்படி ஒரு முன்னுதாரணம் இல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வெண்டும். அப்படியானால் எம்.எஸ்.விக்கு முன்னால் இயங்கிய எம்.கே.டி., ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு உள்ளிட்ட இசைஞர்களின் படைப்புகள் எங்கே. அவற்றை இன்றைய தலைமுறையினர் கேட்கிறார்களா? எனறால் இல்லை என்றுதான் கூறவேண்டும். பழைய தலைமுறையினரில் கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.வியுமே புழக்கத்திலிருக்கிறார்கள். புழக்கத்திலிருக்கிறார்கள் எனும்போது எஃப்.எம். வானொலிகளின் 24மணி நேரச்சேவைக்காக பின்னிரவுகளிலும் நேரடி இசை நிகழ்ச்சிகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் தங்கள் சேகரிப்புகளில் பத்திரப்படுத்திக் கேட்கும் ரசிகர்கள் போன தலைமுறையினராகத்தான் இருக்க முடியும்.


50களுக்கு முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்களிடம் இல்லாத ஒரு சிறப்பு, எம்.எஸ்.வியின் பாடல்களின் மெட்டுக்களில் காணப்படும் சமகாலத்தன்மை (Contemporariness). கர்நாடக, மரபார்ந்த சாயல்கள் தூக்கலாகத்தெரியும் மெட்டுக்களிலிருந்து புதியதொரு மெல்லிசை மெட்டுக்களை உருவாக்கும் கற்பனை அவருக்குமுன் யாருக்கும் கைவந்திருக்கவில்லை. ’அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர்கடிதம்’, ‘யார் அந்த நிலவு’, நான் என்றால் அது அவளும் நானும்’, இப்படி நூற்றுக்கணக்கான எம்.எஸ்.வியின் மெட்டுக்கள் காலத்தால் அழியாது என்பதைவிட அழியாமல் பாதுகாக்கப்படவேண்டும். ‘ஒய் திஸ் கொலைவெறி என்று அலறும் ஊடகக் கலாச்சாரத்திற்குள் பாதுகாக்கப்படவேண்டியவைகள் பற்றி நாம் சிந்தித்திருக்கிறோமா?

எம்.எஸ்.வி. உயிரோடிருந்த கால்நூற்றாண்டு காலத்தில் அவரை என்ன விதத்தில் கௌரவித்திருக்கிறோம். சிலை வைப்பது, தெருக்களுக்குப் பெயர் வைப்பது என்பதைக் கடந்து கலைஞர்களைக் கௌரவிப்பது என்பதன் பொருளையாவது தழிழ்ச்சமூகம் உணர்ந்திருக்கிறதா? சிவாஜிக்கு நேர்ந்தது என்ன? பல்கலைக்கழகங்கள், அரசு, திரைத்துறையினர் ஏன் அவர்தம் குடும்பத்தினர் யாராவது அவரது நடிப்பு நுணுக்கங்களைப் பேசும் ஒரு நூலையாவது கொண்டுவர முயன்றிருக்கிறார்களா? பாலுமகேந்திரா படங்களின் மூலப்பிரதிகள் இருக்கிறதா? 1000 படங்களுக்கு மேல். 5000 பாடல்களுக்கு மேல். ஏறத்தாழ மூன்று தலைமுறை ரசிகர்களை தன் இசையால் மகிழ்வித்தவர் எம்.எஸ்.வி.  30ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சமூகத்தின் பண்பாட்டுக்குள் ஆழமாய் வினையாற்றியவர். அவருக்குத் தமிழ்ச்சமூகம் என்ன செய்யப்போகிறது.  
அவர் அமைதியின் உருவம். அகம்பாவம் துளியும் இல்லாதவர். ஒரு குழந்தையைப் போன்றவர் என்பதுபோன்ற காதுகளைப் புளிக்கவைக்கிற புகழுரைகள் அவரை எவ்வளவு காலம் தூக்கிச் சுமந்துவிடும்?. எந்த ஒரு கலைஞனின் தனிப்பட்ட குணயியல்புகளும் அடுத்து வரும் தலைமுறைகளுக்கு பொருட்டாக இருக்கப் போகிறதா? ஆற்று வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட்டுவந்த ஏட்டுச்சுவடிகளைப் போன்று இதுவும் நடக்கும் என்று நம்பும் எளிமையான காலத்திலா நாம் வசிக்கிறோம்?

60களில் புகழ்பெற்றிருந்த இங்கிலாந்தின் ‘ஜான் லெனனின் (John Lenon) இமாஜின்’ (Imagin) என்றொரு பாடல் 2015வரை வெவ்வேறு அவதாரங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறது. மிகவும் எளிமையும் ஆழமும் நிரம்பிய பாடல். ஈகிள்ஸ் என்ற குழுவினரின் ‘ஹோட்டல் கலிபோர்னியா’ (Hotel California) நூற்றுக்கணக்கான பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் மரபிசைகளும் வெகுசன இசைகளும் புதிய தொழில்நுட்பத்தால் மறுஆக்கம் செய்யப்பட்டு, புதிய சோடனைகளுடன் புதிய ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. நம்முடைய பல ஜாம்பவான்களின் இசைப்படைப்புகள் அந்தக்கால தொழில்நுட்பத்தில் கிராமபோன் கரகரப்புடன் அடுத்த தலைமுறையைத் தொடமுடியாத தூரத்தில் நிற்கின்றன. புதிய பாடகர்ளைக்கொண்டு துல்லியமான தொழில்நுட்பத்தில் அவை வெளிவரவேண்டும். பீத்தோவனும் மொசார்ட்டும் கூட அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பதினைந்தைத் தாண்டாத சிறுவன் ஒருவன் சீர்காழி கோவிந்தராஜனின் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…’ என்ற கர்ணன் படப்பாடலைப் பாடியபோது அப்பாடலின் மூலப்பிரதி உண்டாக்காத அதிர்வுகளை அது ஏற்படுத்தியது. அரங்கத்தில் இருந்த அத்தனை பேரும் உணர்ச்சி மேலிட்டு கண்ணீர் உகுத்தனர். எத்தனையோமுறை கேட்டிருந்தாலும் அந்தச் சிறுவனின் உணர்ச்சிமயமான நிகழ்த்துதலும் இசைக்குழுவினரின் புதிய அணுகுமுறையும் சேர்த்து அப்பாடலை மீண்டும் உயிர்ப்பித்தது. இந்தத் தலைமுறையில் மிகவும் திறமைபடைத்த இளம் பாடகர்களும் இசை கலைஞர்களும் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆகவே எம்.எஸ்.வி. உள்ளிட்ட கலைஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மறுபதிவுசெய்யப்படவேண்டும். அதோடு அவர்களின் மெட்டுக்களின் அமைப்பு, புதுமையாக்கம்(Innovation), மரபிசையைக் கையாளும்விதம், மேற்கத்திய இசைத்தாக்கம், படைப்பாற்றல் போன்ற பல்வேறு தலைப்புக்களில் ஆழமான ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக்கப்பட வேண்டும். கல்விப்புலமும் அறிவுப்புலமும் உருவாக்கும் காத்திரமான உரையாடல்களே கலைஞர்களை வரலாற்றில் இருத்தும் என்பதைத் தமிழ்ச்சமூகம் இனியாவது உணரவேண்டும். 
  
அதைவிடுத்து ‘தமிழ் உள்ளவரையில், தமிழன் உள்ள வரையில் எம்.எஸ்.வியின் படைப்புக்களும் இருக்கும்’ என்பதான சம்பிரதாயமான வார்த்தைகளுக்கும் ‘இயேசு வருகிறார்’ எனும் சுவர் எழுத்துக்களுக்கும் வேறுபாடு இருக்கப் போவதில்லை.









என்னைப் பற்றி....

எனது படம்
Madurai, Tamil Nadu, India
இந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.